திருவள்ளுவர் ஆண்டு உ0௩௯, துலை, க ( 17 - 10 - 2008 ) திங்கள் மின்னிதழ்ஆண்டு : க இதழ் : ௫

வினாதல் விடுத்தல் - முனைவர் இரா. திருமுருகன்

1. கடையேழு வள்ளல்களில், பாரி முல்லைக்குத் தேரீந்தான். பேகன் மயிலுக்குப் போர்வையீந்தான். அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி யீந்தான். மற்றையோர் எவற்றை ஈந்து வள்ளல்கள் ஆனார்கள்?
- புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி.

காரி தனது நாட்டையும், குதிரைகளையும், அருள்நிறைந்த நன்மொழியுடன் இரவலர்க்குக் கொடுத்தான். ஆய் பாம்பு கொடுத்ததாகச் சொல்லப்óபடும் சிறந்த நீல உடையினைச் சிவபெருமானுக்குக் கொடுத்தான். நள்ளி நண்பர் கள் மகிழும்படி இல்லறம் நடத்துவதற்கு வேண்டும் பொருள்களை நாள்தோறும் கொடுத்தான். ஓரி தன் நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்தான்.

2. சென்ற தெளிதமிழ் 11ஆம் பக்கத்தின் அடியில் எனது படைப்புகள்-பிழை என்றுள்ளது. அöறிணையைச் சுட்டும்போது எனது, அவனது போன்று வருதல்வேண்டும் என்று கருதுகிறேன். அதனால் மேற்காணும் செய்தி சரியல்ல என்பது கருத்து. பக்.18இன் அடியில் ஒன்றாம் வகுப்பு-பிழை என்றுள்ளது. பள்ளியில் உள்ள வகுப்பைச் சுட்டும்போது, ஒன்றாம் வகுப்பு-சரி என்பது எனது கருத்து. இது சரிதானா? பக். 7இல் பரிசுதிட்டம், பக்.16இன் இறுதி யில் தமிழ்சொற்கள் என்று உள்ளன. இவை முறையே பரிசுத்திட்டம், தமிழ்ச் சொற்கள் என்று எடுத்துக்கொள்ளப்படலாமா?
- மா.ப.கிருட்டினன், சென்னை.

ஆறாம் வேற்றுமை உருபுகள் உயர்திணையில் வருவதில்லை. அவற்றில் ஒருமை பன்மைப் பாகுபாடு உண்டு. அது ஒருமைக்கு வரும். அ பன்மைக்கு வரும். அதன்படிப் படைப்புகள் பன்மையாதலின் எனது என ஒருமை உருபு வருதல் பிழை. அதை, ‘என படைப்புகள்’ என்று எழுதுவதே சரி. வேண்டு மானால் உருபு தொகுத்து ‘என் படைப்புகள்’ என்றெழுதலாம். முதல் மனைவி, முதற் பிள்ளை, முதலாழ்வார், முதலாயிரம், முதல் திருமுறை என்பதே மரபு. ஒன்றாம் மனைவி, ஒன்றாம் பிள்ளை, ஒன்றாமாழ்வார், ஒன்றாமாயிரம், ஒன்றாந்திருமுறை என்று சொல்வதில்லை. உயிர்த்தொடர்க்குற்றியலுகரச் சொற்களின்முன் இரு வழியிலும் வலி மிகாது ( நன்னூல் 181, 182 ) என்ற இலக்கணப்படிப் பரிசுதிட்டம் என்பதே சரி. தமிழ்ச்சொற்கள் என்பதில் ச் விடுபட்டது பிழை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இக்காலத்தில் பெரும்பாலோர் எனது பொருள்கள், ஒன்றாம் வகுப்பில் படிக்கிறான், அரசுப்பேருந்து, அது அல்ல என்றெல்லாம் எழுதுகின்றனர். (‘அது அன்று’என்பதுதான் சரி ) இவற்றைப் படித்துப் பழக்கப்பட்டுப் போனதால் இலக்கணமுடைய சொற்கள் நமக்குப் பிழையாகத் தோன்றுகின்றன. அதனால் தான் நல்ல தமிழை விரும்பும் தங்கள் நடையிலும் ‘சரியல்ல’ என்ற பிழை வழக்கு நுழைந்திருக்கிறது.

3. உரூபாய், உரூபா, உரூவாய், உரூவா-இவற்றில் எது சரியானது? பலரும் பல வகையில் எழுதாமல் ஒரே முறையைப் பின்பற்றினால் நன்றாயிருக்கு மல்லவா?
- படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு.

ஸ்மர்ண என்ற சமற்கிருதச்சொல் தமிழில், சுமரணை, சுமரணம், சுரணை, சொரணை என்றெல்லாம் பல வகையாக எழுதப்படுவது போல, ரூப்யா என்ற இந்திச்சொல் தமிழில் இவ்வாறெல்லாம் எழுதப்படுகிறது. உரு என்ற தமிழ்ச்சொல் வடக்கே சென்று ருப் ஆனது என்று கருதுவோர், ரூப்யா என்பதை உருவா என்று எழுதுகிறார்கள். இது ஆராயற்பாலது. அனைவரும் ஒரே முறையைப் பின்பற்றினால் நன்றாகத்தான் இருக்கும். சொல்லாக்கத்தில் அனைவரும் ஏற்கும் முடிவை எடுப்பது அவ்வளவு எளிதன்று. இப்படி உருவான பல்வேறு சொற்களில் நாளடைவில் எது பெரும்பாலோரால் பயன்படுத்தப்படுகிறதோ அது நிலைத்த வாழ்வு பெறும்.

4. சென்ற இதழ் 11ஆம் பக்கத்தில் ‘எனது’ என்னும் சொல்லாட்சி பிழை எனக் குறிக்கப்பெற்றுள்ளது. ஆனால் 21ஆம் பக். 7ஆம் வரியில் எனது (கருத்து) என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதை விளக்கவேண்டுகிறேன்.
- புலவர் வீ. வில்வநாதன், வெங்காலூர்.

எனது என்னும் சொல்லை ஆள்வதே பிழை என்று நான் சொல்லவில்லை. அது என்னும் உருபு ஒருமைக்கே வரும் என்பதால் ‘எனது படைப்புகள்’ என்று பன்மையில் பயன்படுத்துவது பிழை என்றுதான் சொன்னேன்.

5. அ)நளித் தெளிதமிழில் உங்கள் பாடலில் ‘ஒருத்தரும்’ என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. ஒருவரும் தானே சரி? ஒருத்தரும் பிழையில்லையா?

ஆ) வெண்பாவின் ஈற்றில் நாள் என்ற வாய்பாட்டில் குற்றெழுத்து மட்டும் (ஒற்றெழுத்தின்றி) வரலாமா? சிறப்பாகுமா?
- பாவலர் கா. காத்தப்பன், கடலூர்த் துறைமுகம்.

அ) ஒருத்தரும் என்பது பிழையில்லை. ‘ஒருத்தரின் முன்னம் சாதல்’ (கம்பரா.7428) என வருவது காண்க. ஒருத்தன், ஒருத்தர் என்ற வடிவங்கள் திருவாசகம், கம்பராமாயணம், திருவிளையாடற்புராணம், தாயுமானார் பாடல் முதலிய பல நூல்களில் பலவிடங்களில் வருகின்றன.

மலைவாழை அல்லவோ கல்வி’ என்ற இசைப்பாடல் அடியில் வி என்ற குற்றெழுத்தை இசைநூல் இலக்கணப்படி விஇஇஇஇ என்று அளபெடுத்துப் பாடவேண்டும். இத்தகையன இசைநூலளபெடை எனப்படும்.

ஆ) க, கல், கா, கால் என நான்கு வகையாக நேரசை வரும். நேரசையே ஓரசைச்சீராக நிற்கும்போது நாள் என்ற வாய்பாட்டைப் பெறுகிறது. எனவே ஒற்றடாது வரும் தனிக்குறில் நாள்வாய்பாட்டில் அடங்காது என்பது சரியில்லை. காளமேகப்புலவர் வெண்பாவில்.

குக்கலிச்சிக் குங்கமலைக் கு

என்று தனிக்குற்றெழுத்து இறுதிச் சீராக வருகிறது. திருக்குறள் நாலடியார் போன்ற நூல்களில் இவ்வாறு வரவில்லை என்பதால், நீங்கள் கருதுவதுபோல் தனிக்குறில் வெண்பாவின் இறுதிச்சீராக வருவது சிறப்பில்லை எனக் கொள்ளலாம்.

6. அ)பலப்பல, பலபல, பல்லபல-இவை மூன்றும் சரியானவையா? பொருள் வேறுபாடு உண்டா?

ஆ) பெருங்கூட்டம், பெரும்புலவர், பெரும்விழா என எழுதுவது பிழையா? விளக்கமளிக்கவும்.
- மரிப்பிலாச்சேய், சாலாமேடு.

அ) பல பல, பலப்பல என்னும் இரண்டும் சரியே. தொல்காப்பியமும் (எழுத்து. 216) நன்னூலும் (170) இவற்றின் புணர்ச்சியிலக்கணங்களைக் கூறுகின்றன. இவற்றினிடையே பொருள் வேறுபாடு ஏதுமில்லை. பல்ல என்பது தொல்காப்பியர் காலத்திலேயே அருகிய வழக்கு என்கிறார் சேனாவரையர். எனவே ‘பல்ல பல’ என வந்தமைக்குச் சான்றில்லை.

ஆ) பெருங்கூட்டம், பெரும்புலவர் என்பன சரி. பெரும்விழா என்பது பிழை. பெரு என்பதன் முன் வல்லினம் வந்தால் மட்டுமே இனமெல்லெழுத்து மிகும். விழா என இடையினம் வந்ததால் ம் என்ற மெல்லெழுத்து மிகுதல் பிழை. பெருவரை, பெருவளி, பெருவாயன், பெருவாயில், பெருவிரல் முதலிய வழக்குகளைக் காண்க. இதன்படி முப்பெரும்விழா, பெரும்வெற்றி, பெரும்வேலை என்றெல்லாம் எழுதுவது பிழை.

7. தாண்டகம் என்னும் பா வழக்கு அப்பர் தேவாரத்தில் வருகின்றது. அப்பர் தவிர வேறு யாரேனும் தாண்டகம் என்னும் பெயரில் பாக்கள் இயற்றியுள்ளனரா? திருநெடுந்தாண்டகம் ஆசிரிய எண்சீர்மண்டிலம் (விருத்தம்) போல வும், குறுந்தாண்டகம் அறுசீர்மண்டிலம் போலவுமேகாணப்படுகின்றன. தாண்டகத்துக்கும் மண்டிலத்துக்கும் மிக நுண்ணிய வேறுபாடுகள் உண்டு எனச் சிலர் கூறுகின்றனர். அவ்வேறுபாடுகள் யாவை? விளக்குக.
- நா. தண்டபாணி, அம்பல்.

திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகம் திருக்குறுந்தாண்டகங்களைப் பாடியுள்ளார். இயற்றமிழ் யாப்பிலக்கணத்தில் தொல்காப்பியர், அறுசீர், எண்சீர் மண்டிலங்களைக் கொச்சகக் கலிப்பாவில் அடக்குவார். காக்கைபாடினியார், அமிர்தசாகரர் முதலிய ஒருசாரார் அறுசீர்விருத்தம், எண்சீர்விருத்தம் என்பர். ஆனால் இசைத்தமிழில் இவற்றையே தாண்டகம் என்பர். அவற்றிலும் அறுசீர் மண்டிலம் அப்பர் தேவாரத்தில் ‘திருநேரிசை’ எனப்படும். அதுவே திருமங்கை யாழ்வார் பாடலில் ‘திருக்குறுந்தாண்டகம்’ எனப்படும். எண்சீர் மண்டிலமே அப்பர் தேவாரத்தில் ‘திருத்தாண்டகம் எனப்படும். திருமங்கை மன்னன் பாடலில் ‘திருநெடுந்தாண்டகம்’ எனப்படும். இயற்றமிழிலக்கணத்திலிருந்து இசைத்தமிழிலக்கணம் பல வகைகளில் வேறுபடுகிறது. தாண்டகத்துக்கு யாப்பருங்கலஉரை, ‘தாண்டகம் 27 எழுத்து முதலாக உயர்ந்த எழுத் தடியினதாய் வரும்’ என்கிறது. இந்த இலக்கணம் இன்றுள்ள இலக்கியங் களுடன் பொருந்தவில்லை. 20 எழுத்தளவுள்ள அடிகளும் அப்பர் திருத்தாண் டகத்தில் உள்ளன. 14 எழுத்தளவுள்ள அடிகளும் ஆழ்வாரின் திருக்குறுந்தாண் டகத்தில் உள்ளன. தாண்டகத்திற்கும் மண்டிலத்திற்கும் இருப்பதாக எனக்குத் தெரிந்தது, அறுசீர் எண்சீர்மண்டிலங்கள் இசைத்தமிழில் தாண்டகம் எனப்படுகின்றன என்ற ஒன்று மட்டுமே. சிலர் கூறுவனவாக நீங்கள் கூறும் அந்த நுண்ணிய வேறுபாடுகள் எனக்குப் புலப்படவில்லை.

8. பரிசு திட்டம் என்பதில் ஒற்று மிகாதா என்ற ஐயத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும். அறியச் செய்யுங்கள்
- பொறிஞர் அகன், மாத்தூர்.

கயிறு, வயிறு, மலடு, தவிடு என்பன போன்ற உயிர்த்தொடர்க் குற்றிய லுகரங்கள் கயிற்றுக் கட்டில், வயிற்றுப் பசி, மலட்டுத் தன்மை, தவிட்டுப் பானை என (அல்வழி, வேற்றுமை ஆகிய) எல்லா இடங்களிலும் ஒற்று இரட்டக்கூடியவை. எனவே இத்தகைய உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் வலி மிகும். படகு, வரகு, அரசு, பரிசு என்பன போன்ற உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் படக்கு, வரக்கு, அரச்சு, பரிச்சு என ஒற்று இரட்டாதவை. எனவே இத்தகைய உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்களில் வலி மிகாது எனத் தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கணங்கள் தெளிவாகக் கூறுகின்றன. எனினும் படகுத்துறை, அரசுப் பேருந்து என்பனபோன்ற பிழைவடிவங்களில் பழகிவிட்டதால் நமக்கு இவ்விடங்களில் மிகுவதே சரி என்று தோன்றுகின்றது. நானும் தொடக்கத்தில் தெளிதமிழில் பரிசுத்திட்டம் என்று பிழையாகத்தான் எழுதினேன்.

9. பிள்ளைத்தமிழில் வரும் வருகைப்பருவம் வாரானை என்று எட்டாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் உள்ளது. வாரானை என்ற வழக்கு உள்ளதா? விளக்கவேண்டுகிறேன்
- ம. பாலன், கலிதீர்த்தாள்குப்பம்.

வருகைப் பருவத்தை வாரானைப் பருவம் என்றும் குறிப்பிடுவதுண்டு. வாரானை=வருகை என்று பொருள்படும். தொழிற்பெயர் விகுதிகளில் ஆனை என்பதும் ஒன்று. வா+ர்+ஆனை= வாரானை. வா-பகுதி, ஆனை-தொழிற்பெயர் விகுதி, ர்-விரித்தல் விகாரம்.

10. அ)எல்லாரும், எல்லோரும் என்பவையும், பெரும்பாலார், பெரும்பாலோர் என்பவையும் சரிதாமா?

ஆ) சென்ற தெளிதமிழிற் சிற்பியின் கூற்று மறுக்கப்பட்டுள்ளது. உரைநடை கவிதையாகாதென்பது உண்மையே. ஆனால், செறிவான, நறுக்கான, சுருக்கென உணர்த்தும் உணர்வுசால் உரைநடையைப் புதுக்கவிதை என்ற பெயரில் இல்லாமல் வேறு ஒருபெயரிட்டுச் சிறப்பிக்கத் தமிழ் இலக்கணம் தடை செய்கிறதா?
- மரிப்பிலாச் சேய், விழுப்புரம்.

அ) ன், ள், ர், ய் ஆகிய மெய்களை இறுதியில் உடைய சில பெயர்களுக்கும் வினைகளுக்கும் அயலாக வரும் ஆகாரம் ஓகாரம் ஆதல் செய்யுள் வழக்கே என்கிறது இலக்கணம், (தொல்.சொல்.195,211) இது பிற்காலத்தில் பேச்சு வழக்கிலும் புகுந்துவிட்டது. இதன்படி எல்லார், பெரும்பாலார் என்ற பெயர்கள் எல்லோர், பெரும்பாலோர் என வழங்கல் சரியே.

ஆ) தமிழிலக்கணம் எதையும் தடை செய்வதில்லை. அது மிகவும் நெகிழ்ச்சியுடையது. இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று கட்டளை யிடுவதில்லை. ஒரு பிழையான வழக்குக்கூடப் பெரியோர்கள் பயன்பாட்டிலும் புகும் அளவுக்குப் பெருவழக்குப் பெற்றுவிட்டால் அதற்கு இலக்கணம் இடங்கொடுக்கிறது. மேலும் புதுக்கவிதையைப் பற்றித் தமிழிலக்கணத்திற்கு ஒன்றுந் தெரியாது என்று நினைக்கிறேன். செறிவான, நறுக்கான, சுருக்கென்று தைக்கும் உணர்வுசால் கூற்றுக்களை நானும் சுவைக்கிறேன். கூட்டங்களிலும் மேற்கோளாகச் சொல்லி மகிழ்கிறேன். ஆனால் அவற்றைப் பாட்டு (கவிதை) என்று சொல்வதைமட்டும் என்னால் ஏற்க முடியவில்லை. பாட்டு, நாட்டியம் ஆகியன கலைகள். கலைகளுக்குச் சிறப்பான உணர்வு வெளிப்பாடுமட்டும் போதாது. அழகிய வடிவமும் வேண்டும். உணர்வு மீதூர்ந்து குதிப்பதெல்லாம் பரத நாட்டியம் ஆகாது. அதற்கென்று தாளம் சொற்கட்டு மெய்ப்பாடு முதலிய அழகிய வடிவம் பற்றிய இலக்கணங்கள் உண்டு. அவற்றைப் பல ஆண்டுகள் வருந்திக் கற்கவேண்டும். நீங்கள் கூறும் புதிய வடிவத்தை உரைவீச்சு என்கிறார் முனைவர் சாலை இளந்திரையனார். இவற்றில் நல்ல தமிழில் படைக்கப்படும் சுவையான உரைத்துணுக்குகளை ஒரு புதிய இலக்கிய வகையாகவே தொகுத்துப் போற்றலாம்.

11. அ)காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை என்பதால், வினைப்பகுதி+பெயர்ச்சொல் = வினைத்தொகை என்றாகிறது. அதன்படி அட்டில்(அடு+இல்), புக்கில் (புகு+இல்) இரண்டும் வினைத்தொகைதானா?

ஆ) உருவகம், இருபெயரொட்டுப் பண்புத்தொகை-இரண்டும் சில இடங்களில் என்னை மயக்கத்தில் ஆழ்த்துகின்றன. தெளிவுபடுத்துக
- சுவை. மருதவாணன், அறியலூர்.

அ) கொல் யானை எனும்போது, கொன்ற, கொல்கின்ற, கொல்லும் என்ற காலவேறுபாட்டையும், கொல்லுதல் என்ற புடைபெயர் வினையையும் கருதுகின்றோம். ஆனால் அரிவாள் என்ற சொல்லைக் காலத்தையோ, வினையையோ கருதாது ஒரு பொருளின் பெயர் என்ற அளவில்தான் சொல்லுகின்றோம். இச்சொல்லும் வினைப்பகுதியும் பெயருமாகத்தான் உள்ளது. இத்தகைய சொற்களை வினைத்தொகைக்குறிப்பு என்பர் சிவஞானமுனிவர். அட்டில், புக்கில் என்பன இத்தொழிற்கு உரியது இது என்னும் பெருள்பட வருவதால்வினைத்தொகைக்குறிப்பில் சேர்க்கலாம். மேலும் இவை அடுமனை, புகுவிழா என்பனபோல் வாராமல், வினைப்பகுதி திரிந்து பெயர்த்தன்மைப் பட்டிருப் பதையும் நோக்குக.

ஆ) தாமரை முகம் என்பது உவமை. இதில் தாமரை என்ற உவமையும் முகம் என்ற பொருளும் தனித்தனியாக உள்ளன. இப்படியின்றி உவமை யையும் பொருளையும் ஒன்றாகவே கருதி முகத்தாமரை என்று கூறினால் உருவகம். இத்தொடரில் உள்ள இரண்டு சொற்களில் ஒன்று பொருள், மற்றது உவமை. தாமரைமலர் என்ற இரண்டு சொற்களில், மலர் பொதுப் பெயர். தாமரை சிறப்புப்பெயர். இப்படிப் பொதுப்பெயரும் சிறப்புப் பெயரும் ஒட்டி ஒருசொல்போல் வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதில் குழப்பம் ஏற்பட வழியில்லை. முகமாகிய தாமரை, தாமரையாகிய மலர் என்று இவ்விரண்டிலும் ஆகிய என்ற சொல் விரிவதால் சிறிது குழப்பம் தோன்றக்கூடும்.

இரா. திருமுருகன், புதுச்சேரி, இந்தியா
மின்னஞ்சல் : irathirumurugan@yahoo.co.in