ஓர் அரசின் முதற் கடமை குடிமக்களின் உயிருக்குப் பாதுகாப்பாக அமைவதுதான். சட்டமும் ஒழுங்கும் அதற்காகவே அமைந்துள்ளன. மக்கள் வாழ்க்கையில் உயிர் பெற்றிருக்கும் இடம் மிக மிகப் பெரிது. ஓர் உயிர் நீங்குவதால் ஏற்படும் துன்பத்தைப் பணக்காரர்களை விட ஏழை எளிய மக்களே மிகுதியாக உணர்கின்றனர். தன் உழைப்பைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றும் குடும்பத் தலைவனை நம்பித்தான் அக் குடும்பமே இருக்கின்றது. அவன் இறந்துபோனால் குடும்ப உறுப்பினரின் வாழ்க்கை அடியோடு சீர்குலைகின்றது. கணவனை இழந்த ஏழை மனைவி, தந்தையை இழந்த சின்னஞ்சிறு குழந்தைகள் எவ்வளவு பெரிய இன்னல்கட்கும் அல்லல்கட்கும் ஆளாகின்றனர்!
அரசு என்ற ஒன்றை மக்கள் அமைத்துக் கொண்டதே தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை அரசு வழங்கவேண்டும் என்பதற்காகத்தான். உரூசோ என்ற பிரெஞ்சு அறிஞரின் கருத்துப்படி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே அமையும் ஒப்பந்தம்தான் அரசு. மக்கள் அரசுக்கு அடங்கி நடக்க வேண்டும்; அரசு மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அரசு மக்களின் உயிரை, உடைமைகளைக் காப்பாற்றத் தவறினால் ஒப்பந்தம் உடைந்து விட்டது என்பதே பொருள். தங்கள் உயிரையும் உடைமைகளையும் காக்கத் தவறிய அரசை மக்கள் மதிக்கத் தேவையில்லை.
முதுமையால், நோயினால், எதிர்பாரா நேர்ச்சியால் மக்கள் இறந்து போவது இயற்கை. ஆனால் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அமைந்த சட்டமும் ஒழுங்கும் குலைவதால் ஏற்படும் உயிர் இழப்புக்கள் இயற்கையானவை அல்ல. அரசு தன் கடமையைச் செய்யத் தவறுவதால் அவை ஏற்படுகின்றன. அவை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில்தான் அரசின் முழுக் கவனமும் இருக்க வேண்டும்.
இந்திய அரசு இப்படிக் கவனமாக இருக்கின்றதா? இல்லை; இல்லை, இல்லை! உலகிலேயே மக்கள் உயிரைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாத அரசு இந்திய அரசுதான். இந்திய அரசைப்போல் ஏழை மக்கள் மீது அக்கறையற்ற, பரிவுணர்ச்சி மழுங்கி மரத்துப்போன, கடமை தவறுதல் பற்றிக் கவலைப்படாத கொடிய அரசு உலகில் வேறெங்கும் இருக்க முடியாது.
இந்திரா காந்தியை எவனோ ஒரு வெறியன் சுட்டுக் கொன்றான் என்பதற்காக மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிச் சீக்கியர்களின் உயிர் பறிபோயிற்றே. இந்திய அரசால் கப்பாற்ற முடிந்ததா? இதுபோன்ற கொடுமை உலகில் வேறெந்த நாட்டிலாவது நடந்திருக்குமா? நாம் நம்மைக் காந்தியடிகளின் கொல்லாமை வழிநடக்கும் அரசு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். என்ன மாய்மாலம்!
இதைவிட இன்னும் பெரிய கொடுமை, ஒவ்வொரு நாளும் அப்பாவித் தமிழ் மீனவர்களின் உயிர் சிங்கள வெறியர்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்க, இந்திய அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதுதான். தமிழ் மீனவர்கள் இந்திய நாட்டின் குடிமக்கள். எந்தக் குற்றமும் செய்யாதவர்கள்; அவர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்கு இன்றுவரை இந்திய அரசு எந்தக் கடுமையான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையே!
சொந்தக் குடிமக்களை இன்னொரு நாட்டான் கொன்று குவித்துக் கொண்டிருக்கப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் அரசு ஓர் அரசாகுமா? இத்தகைய அருவருக்கத்தக்க அரசின்மேல் மக்களுக்கு எப்படி மதிப்பு ஏற்படும்?
மீன்பிடித்தாலன்றி அன்றாட உணவுக்கும் வழியில்லாத மீனவர்கள், - அவர்களை இழந்து எத்தனைக் குடும்பங்கள் திண்டாடித் தெருவில் நிற்கின்றன! பசிபட்டினியால் சாகின்றன? குழந்தைகளின் வாழ்க்கை எப்படிக் குலைக்கப்படுகின்றது! இயற்கை நேர்ச்சிகளா இவை? இல்லையே? அரசின் கடமை தவறிய கழிசடைத்தனத்தால், கல் நெஞ்சத்தால், கடுகளவு கூட அறிவற்ற முழு மடத்தனமான போலி அரசியல் கொள்கையால் ஏற்பட்ட கொடுமைகள் தாமே இவை! மக்கள் அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் வெள்ளம் இந்த அரசை அடித்துச் செல்லும் நாள் நெடுந்தொலைவில் இல்லை.
ம.இலெ.தங்கப்பா, புதுச்சேரி


