திருவள்ளுவர் ஆண்டு ௨0௪0, மேழம், க ( 14 - 04 - 2009 ) திங்கள் மின்னிதழ்ஆண்டு : க இதழ் : ௧௧

யாப்பிலக்கணம்

எளிய முறையில் மரபுபாவலர் ஆகலாம்!-6 - முனைவர் இரா. திருமுருகன்

அழகுணர்வும் பாட்டுள்ளமும் படைத்த இளைஞர் சிலர் தங்கள் உணர்வுகளைப் பாட்டாக வடித்து வெளிப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் தமிழில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து பண்பட்டுள்ள, வியப்புக்குரிய நமது தமிழ் யாப்பிலக்கணத்தை அவர்கள் கற்றுக்கொள்ள முன்வருவ தில்லை. இதற்கு, அந்த இலக்கணநூல்கள் ஆசிரியர் துணையின்றிக் கற்கமுடியாதபடி செய்யுள் வடிவில் இருப்பது ஒரு காரணமாயிருக்கலாம். யாப்பிலக்கணம் பாட்டுக்கு விலங்கு என்று கூறும் “புதுக்கவிஞர்கள்” இன்று புகழ்மிக்க பாவலர்கள் என்று விளம்பரம் பெற்றிருப்பது அவர்கள் யாப்பிலக்கணத்தைப் புறக்கணிக்க மற்றொரு காரணமாயிருக்கலாம். எனவே, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தோரும் ஆசிரியர் துணையின்றித் தாமே எளிதில் யாப்பிலக்கணத்தைக் கற்றுப் பாவலராகும் வகையில் பாவலர் பண்ணை என்ற நூல் எழுதப்பெற்றுள்ளது. இனி அந்நூல் பகுதி பகுதியாகத் தமிழ்க்காவலில் வெளிவரும். முறைப்படிப் பாட்டெழுத விரும்பும் தமிழ்கூறு நல்லுலகெங்குமுள்ள தமிழர்கள் இதனைப் பொறுமையுடன் பயின்று பயன்பெறலாம். இதில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு விடை எழுதி அனுப்பினால், அடுத்த இதழில் அதன் திருத்தம் வெளிவரும்.

13. நிலை மண்டில ஆசிரியப்பா

பாப்புனை இற்றைப் பாவலர் பலபேர்
யாப்பிலக் கணம்எனில் யாதென அறியார்
இலக்கண அறிவும் இல்லை; நல்ல
இலக்கியப் பயிற்சியும் இல்லை. அதனால்
சொன்னயம் பொருள்நயம் தொடைநயம் இன்றி
என்னவோ எழுதுவர். இவர்செயல் அந்தோ!
எதுவோ ஆட, எதுவோ கண்டே,
அதுவாய்த் தானும் ஆடிய கதையே!-இரா. தி.


இப்பாடல் இரண்டு இரண்டு அடிகளாகப் பார்த்தால் ஒவ்வொரு வெண்செந்துறைபோல் அமைந்துள்ளது அன்றோ? சென்ற பாடத்தில் நாம் தெரிந்துகொண்ட வெண்செந்துறை கள் பலவற்றை ஒரு தொடர்பாக எழுதியதுபோல் உள்ளது இப்பாடல். இதற்கு ஆசிரியப்பா என்று பெயர். அகவல் என்றும் சொல்வார்கள். ஆசிரியப்பாவில் பலவகை உண்டு. மேற்கண்ட பாடல் நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படும். மற்றோர் ஆசிரியப்பாவைப் பார்ப்போம்.

கட்டுரைகள்

பூம்புகார் கடலடி ஆய்வு முடிவுகளைப் போற்றுவோம் - குமரிக் கண்ட ஆய்வுக்கு குரல் கொடுப்போம் - நந்திவர்மன் பொதுச்செயலாளர் திராவிடப்பேரவை

திராவிட மொழிகள் பற்றிப் பிற நாட்டார் ஆய்வுகள் செய்யத் தொடங்கி நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவவைகளைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போமாக!

A Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் 1905 ல் சியோல் நகரில் தி மெதடிசுடு பப்ளிசிங் அவுசு வெளியிட்ட நூலாகும். பி.ஒமர் அல்பர்ட்டு இந்நூலெழுதி நூற்றாண்டு ஆகிறது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கொரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் ஒப்பிலக்கணம் உண்டு என உணர நூறாண்டு ஆகி விட்டது.

The Genealogy of the Japanese Language: Tamil and Japanese என்ற தலைப்பில் “சப்பானிய மொழியின் மரபியல்: தமிழும் சப்பானியமும்” என்ற நூலெழுதிய சுசுமோ ஓனோ பற்றி நமது ஊடகங்களில் செய்தி வந்ததுண்டா? “சப்பானிய மொழி திராவிட மொழியே” என்று டாக்டர் பொற்கோ, நந்தன் (1998 சூலை) இதழில்தான் எழுத முடிந்தது. இதுபற்றி ஆங்கில ஏடுகள் ஏன் வெளியிடுவதில்லை? வெளியிடாத அந்த ஏடுகள் ஏன் தமிழின் பெருமைமிகு வரலாற்றை மறைக்கப் பார்க்கின்றன என நாம் எண்ணிப் பார்த்தோமா? அவற்றின் உள்நோக்கம் உணர்ந்த பிறகாவது நம்மிடமுள்ள தொலைக்காட்சி ஊடகங்களை உண்மையை வெளிக்கொணர நாம் பயன்படுத்தினோமா?


ஆதித் தமிழர் மெய்யியல் - ஆதி. சங்கரன்

முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம்.

பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம்.

1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல்.

2. மெய்யியல் படிநிலைகளின் அடிப்படையில் முன்வைத்தல்.

3. மருவிய வழக்கு முறையில் அயன்மைத் தோற்றம் பெற்றவை.


தமிழர்களுக்குத் தங்கப்பா சுட்டும் பனிப்பாறை நுனிகள் - தேவமைந்தன்

சென்ற திங்கள் நான் குறிப்பிட்டிருந்த தங்கப்பாவின் 'வேப்பங்கனிகள்' பாத்தொகுப்புக்குப் பின் 'கள்ளும் மொந்தையும்' என்ற நூல் வெளிவந்தது. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்தப் 'பனிப்பாறை நுனிகள்' நூல் 1998ஆம் ஆண்டு வெளிவந்தது.

நூலாசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த முனைவர் இரா. திருமுருகனார், "ஆங்கிலப் புலவர் மில்டன் எண்ணத்தில் மூழ்கிய மாந்தன்(pensive man) என்று ஒருவனைப் படைத்துள்ளார். அவன் தீர எண்ணித் தெளிபவன். அமைதியையும் தனிமையையும் விரும்புபவன். ஆரவாரத்தையும் ஆடம்பரத்தையும் வெறுப்பவன். இயற்கையில் இன்பம் காண்பவன். அழகை வழிபடுபவன். நிலவின் வெளிப்பாடும் பறவையின் பாடலும் அவனுக்குப் பேரின்பம் தரும். தங்கப்பாவுடன் உரையாடும்போதும், அவர் வாழ்க்கையைக் காணும்போதும் எனக்கு அப் பாமகனின் நினைப்பு வருவது உண்டு" என்று பொருத்தமாக மொழிந்திருந்தார்.

"தங்கப்பா கூட எங்கள் வழிக்கு வந்துவிட்டார், பார்த்தீர்களா?" என்று என்னிடம் களிப்புடன் சொன்ன முனைவ - பேராசிரிய - புதுப்பாவலர் ஒருவரிடம், "இந்நூலில் உள்ள பாடல்கள் மரபுவழிப் பாடல்களே. இணைக்குறள் ஆசிரியப்பாவில் சொற்சீரடிகள் விரவி வந்துள்ள பாடல்கள் இவை. இடையிடையே மிகச்சில நெகிழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன(பக்.ix-x)" என்ற பகுதியைக் காண்பித்தேன்.


இதுவன்றோ பாதுகாப்பு வளையம்... - முனைவர் மு.இளங்கோவன்

பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டின் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னர்களும் தங்களுக்குள் பூசல் ஏற்பட்டுப் போர் நடைபெற்ற சூழலில் குடிமக்களை வருத்தாமல் போர் செய்துள்ளமையை நம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஒன்பதாம் பாடல் தமிழர்களின் அறவுணர்வு மீறாப் போரியல் பற்றி விளக்குகிறது.

மக்களை எதிரியாக நினைத்துக் கரிக்கட்டைகளாக்கும் இன்றைய கொடும் நெஞ்சத்தினர்க்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைகிறது.நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி என்ற மன்னரைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்தது கீழ்வரும் பாடல்.

கருத்துக்களம்

"இந்தியா தவறு செய்துவிட்டது!" சாடுகிறார் முன்னாள் : இந்திய இராஜதந்திரி ராஜீவ் டோக்ரா

"உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும், உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும்.

இன்னும் சுருங்கச் சொன்னால், இலங்கையின் சின்னஞ் சிறு பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து உலகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கொடும் செயல்களை செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினால் அந்தப் பகுதி நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருக்கிறது.

சுருங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நிலப் பகுதியில்தான், ஒரு காலத்தில் தன்னாட்சி குறித்த தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை சுடர் விட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தப் பகுதியில் வயதான ஆண்களும் பெண்களும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும்தான் இருக்கிறார்கள். இளைஞர்கள் அழிந்துவிட்டனர். தங்களின் தாயகக் கனவை தங்களுடன் வேறு உலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தெய்வங்களுடன் தொடர்புகொள்வது கூட அவர்களுக்கு எளிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உள்ள கடவுள்கள் கேளாக் காதினராகவும், பேசாத வாயினரதாகவும்தான் இருக்கின்றனர்.


சார்லசு ஆண்டனிக்கொரு மடல்!  - சக்மோகன்சிங்   ( தமிழில் கார்க்கி )

அன்பு சார்லசு ஆண்டனி,

உயிர்வாழ்தல், அடையாளம், விடுதலை ஆகியவற்றிற்கான உங்கள் போராட்டத்துடனான என் ஓர்மைப்பாட்டைத் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளவும். ஐயாற்று நிலத்தில் (பஞ்சாப்) நடந்த போராட் டத் தை மிக அருகிலிருந்தே கண்டவன் என்ற வகையில் நீங்களும் உங்கள் மக்களும் எவ்விதச் சூழ்நிலையில் உயிர்வாழ்தலுக்கான போராட்டத்தை நடத்தத் துணிந்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஊடகங்களில் உங்கள் தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரனோ ஒரு நாள் நண்பனாய்க் காட்டப்படுவார், இன்னொரு நாள் எதிரி யாக்கப் படுவார். சில நாள் அவர் காக்கப்படுவார், இன்றோ மிகுதி யாய்க் கவனிக்கப்படுகிறார். சிலருக்கு அவர் தீவிரவாதி, பலருக்கோ அவர் ஒரு மீட்பர். அவர் யார் என்பதைக் கடைசியில் வரலாற்றை நடுதீர்க்க விட்டு விடுவதே சிறப்பானது.

நான் ஓர் மறக் குடியைச் சேர்ந்தவன். வீரம் செறிந்த மக்க ளுக்கு உறுதுணை புரிவதில் சீக்கியர் அறியப்பட்டோர். எங்கள் ஐயாற்றக அரசியல்வாதிகள் பலர் தங்கள் திருவாயுதிர்த்து அப்பட்டமாக அறிக்கை களால் வெளிக்காட்டவில்லை என்றாலும், நம்புங்கள், தமிழீழப் போராளி களின் அகஎழுச்சி, மனவுறுதி, போர் மறம் கண்டு வியப்போர் பலரிங்கு உளர்! உங்கள் போராட்டத்தின் இறங்குமுகம் தொடர்பான நடப்புச் செய்திகள் இங்கு பலரைக் கவலைக்குள்ளாக்கியிருக்கின. இக் கடிதத்தை நான் வரைவது நீங்களும் உங்கள் மக்களும் இலங்கைப் படைகளின் வேதியியல் ஆயுதங்கள், நச்சும வளிகளை எதிர்கொள்கையில், வெளியேறச் சில மணிநேரங்களே கொடுக்கப்பட்டிருந்து குறுக்குச்சூட்டில் ஏதுமறியா ஆயிரக்கணக்கானோர் அகப்பட்டிருகையில் உங்களுக் கான என் ஓர்மைப்பாட்டை வெளிப்படுத்தவே


61 ஆண்டு கால தமிழர் படுகொலை வரலாறு: ஒரு முழுமையான தொகுப்பு

இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசு தலைமையில் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு வரலாறு நீண்டது. பல வடிவங்களில் முன்னெடுக்கப்படும் இந்த இன அழிப்பில் முதன்மையான வடிவமாக இருந்து வருவது நேரடியான படுகொலைகளாகும். இந்த படுகொலைகளின் அத்தியாயங்கள் தமிழ் மக்களின் மனங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறாக கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரியவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகத் தொகுத்து வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் (நிசோர்) ஒரு தொகுப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அந்த படுகொலைகள் நடைபெற்ற சூழ்நிலைகள், அவை தொடர்பான சாட்சியங்கள் என்பன முடிந்த அளவிற்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

அந்த சாட்சியங்கள் தாம் நேரடியாகப் பார்த்ததாகக் கூறிய விடயங்கள் மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப் படுகொலைகளின் சில பகுதிகளை மட்டுமே ஒரு சாட்சி கண்ணால் பார்த்திருக்க முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்த படுகொலைகள் எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான வரைபடமும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

இலக்கணக்கடல் முனைவர் இரா.திருமுருகனார் மறைவு

புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத்தெரிகிறது.புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை,62மறைமலையடிகள் சாலையில் உள்ள(புதுவைப்பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு:

+ 91 936 266 4390 செல்பேசி
+ 91 413 2201191 தொலைபேசி

திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.

சாவிலும் மீண்டு சரித்திரம் படைப்போம்

பாவிருந்து

வருகின்றார் வருங்கால... ... ... (6) - இரா.செம்பியன்

உழைப்பதற்கே உறுதியுடன் இருக்கும் எல்லை உனக்கிந்த உலகினிலே கவலை இல்லை
பிழைக்கின்றார் பிறர்உழைப்பில் பெரும்பா லானோர் பேசுவதோ பொதுவுடைம பேணு வார்போல்
கழிக்கின்றார் பலரிங்கே பொழுதை வீணே கல்லாக உட்கார்ந்து கவலை யின்றி
இழக்கின்றார் உரிமையினை என்ப தைநீ எடுத்தியம்ப வேண்டுமப்பா இவர்கட் கெல்லாம்

பொல்லாத உலகமிது புளுகை விற்றுப் பொருளீட்டிப் பிழைக்கின்ற புன்மை பாரா
நில்லாதே அல்வழியில் வந்த செல்வம் நிழலொன்றும் மெய்காப்பான் ஆவ தில்லை
வல்லாண்மைக் கெதிராக நில்லு தம்பி வலியற்றார்க் குதவிடவே செல்லு தம்பி
பொல்லாங்கு சூழ்ந்திடினும் அஞ்சி டாத புன்னையினை வேரறுக்கப் புறப்ப டின்

உலகத்தமிழர் பக்கம்

பிரித்தானியாவில் வீதி மறிப்பு போராட்டம்

தமிழீழ தாயகமே சிறீலங்கா அரசின் இராசயன குண்டுகளால் அழிந்ததை கேள்வியுற்ற பிரித்தானிய வாழ் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் (18-05-09) நாடாளுன்ற சதுக்கத்தில் நடைபெற்றுகொண்டிருந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கவலையை பிரித்தானிய அரசிற்கு வெளிக்காட்டினர்.

அதேவேளை கடந்த 44 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கும் போராட்டத்தில் இரத்தம் தூய்ந்த துணிகளால் தங்களை கட்டி வன்னியில் மக்கள் பட்ட அவலத்தை பிரதிபளித்து ஒரு புதுவிதமான கவனயீர்ப்பை மேற்கொண்டனர். சிலர் வன்னி மக்கள் போல் வேதனையான முகங்களுடன் காணப்பட்டனர்.

மாலை 6 மணியளவில் மக்களின் வருகை அதிகரித்த நிலையில் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி தங்கள் கண்டனத்தை பிரித்தானிய பிரதமருக்கு உணர்த்தினர். இரவு 11 மணிவரை தொடர்ந்த இந்த போராட்டத்தில் மக்கள் தொகை குறைவடைந்து சென்றதை அடுத்து எஞ்சியிருந்த மக்களை பிரித்தானிய காவல்துறையினர் பலவந்தமாக நாடாளுமன்ற சதுக்கத்தில் தள்ளினர். தாய்மார் குழந்தைகள் உட்பட எஞ்சியிருந்த அனைத்து தமிழ் மக்களும் பலத்த நெருக்கடியில் பாதணிகளையும் மற்றும் தங்கள் உடமைகளையும் தொலைத்த நிலையில் புல்வெளிக்கு சென்றனர்.

வினாதல் விடுத்தல்

வினாதல் விடுத்தல் - முனைவர் இரா. திருமுருகன்

1. காய்-காய்-மா தேமா என்ற அமைப்பிலான எண்சீர் விருத்தத்தில் (பாவலர் பண்ணை பக், 58) ஒர் அரையடி. படைத்தலைமை ஏற்பதனைத் தடுப்பவன் யார்? என்று உள்ளது, காய்-காய்-கருவிளம்-மா என்று வரலாமா?
- மகிழன், விழுப்புரம்.

காய்-காய்-கருவிளம்-மா என்று வருதல் கூடாது. சீர் பிரித்து அச்சிட்டதில் ஏற்பட்ட தவறு அது.

படைத்தலைமை ஏற்பதனைத் தடுப்ப வன்யார்?

என்று சீர் பிரித்து அச்சிடப்பட்டிருக்க வேண்டும். இதில்-காய்-காய்-மா தேமா என்ற இலக்கணம் பிழையாமையைக் காணலாம்.

வேண்டுகோள்

தமிழ்க்காவல் படிக்கும் தமிழ்நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் இனம் ஆகியவற்றின் மேம்பாடு குறித்த கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், துணுக்குச்செய்திகள் முதலியவற்றைத் ‘தமிழ்க்காவல்’ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.

உங்கள் நண்பர்கள் முதலிய தொடர்புடையவர்களுக்குத் தமிழ்க்காவலின் இணைய முகவரியை அன்புகூர்ந்து தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.

site stats